-

ஒப்பில்லா உழவன் நான் ..

{[['']]}
மழைச்சாரல்
03, July 2012
ஒப்பில்லா உழவன் நான் ..
ஒப்பனை இல்லாத மனிதனும் நான்தான் ..
ஒப்புக்கு ஒரு வாழ்க்கையோடு வாழ்கிறேன் !

உலகின் முதல் குடிமகன் நான் ....
உழைத்து பிழைக்கும் உன்னதனும் நான்தான் ..
உயிர் வளர்க்கிறேன் ஊனமான இந்த உலகில் ..!
மண்ணுக்குள் உயிர் விதைத்த மனிதன் நான் ..
மக்களாட்சியில் மக்கிப்போன மடையனும் நான்தான் .....
மக்கிப்போனாலும் என் மண்ணுக்குத்தான் உரமாவேன் ..!
உழவை தெய்வமாய் தொழும் பக்தன் நான் ..
உண்ணாமலும் உழைக்கும் உழைப்பாளியும் நான்தான் ...
உதிர வேர்வையில் ..வெம்பி வாழ்கிறேன் ..!
மழையை மண்ணோடு காதலித்தவன் நான் ..
மனதார மண்ணை பூசித்தவனும் நான்தான் ...
மனதில்மட்டும் ஏனோ தூசியாய் பறக்கிறேன் ..!
முதுகெலும்பான விவசாயத்திற்கு ...
முதுகெலும்பில்லாத அரசியலுக்கும் ...
முரணாய் போன களையும் நான்தான் ..!
ஏர் சுமந்த தோள் இது ..தோள் தர வேண்டாம் ..
ஏறி மிதித்து ..ஏளனம் செய்யாதீர்கள் போதும் ..!
ஒப்பில்லா உழவன் நான் ..
ஒப்புக்கு கூட உங்களோடு ஒப்பிடாதீர்கள் ..
நாங்கள் மண்ணோடு உறவாடுபவர்கள் ...
மன்னித்துவிடுங்கள் ...
மனிதர்கள் உருவில் உள்ள ...கயவர்களோடு
எங்களையும் களையாய் விதைத்து விடாதீர்கள் !
ஒப்பில்லா உழவன் நான் ..
ஒப்புக்கு கூட உங்களோடு ஒப்பிடாதீர்கள் ..
Share this poem :

No comments:

Post a Comment

 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com