-
Latest Poems

சிறு வயதுகாலம்...

‎புத்தாடையும்‬, புது சப்பாத்தும்
அடம் பிடித்து
வாங்கி விட்டேன்
ஆசையாய் அணிந்து செல்ல
விடியாமல் அடம்
பிடிக்கின்றது இரவு

வாழ்க்கை....!

சுஜாதா
 
கனவுகள் ஆயிரம்
கண்டதுண்டு
கற்பனை செய்தும்
வாழ்ந்ததுண்டு
கல்வியைச் சிறிது
கற்றதுண்டு
கருவினைச் சுமந்து
பெற்றதுண்டு
கணக்கினைப் பெரிதும்
வெறுத்ததுண்டு
கருணையைக் கண்டு
களித்ததுண்டு
கடவுளை என்றும்
துதித்ததுண்டு
கடற்கரை எழிலை
இரசித்ததுண்டு
கட்டிய கணவனை
மதித்ததுண்டு

விடிவு

சுஜாதா
 
கண்ணை மூடி இருந்துவிட்டால்
காலையில் சூரியன் உதியானா?
மனதை நீதான் பூட்டிவிட்டால்
மனதில் நினைவும் மலராதா?
கதவைப் பூட்டி நீயிருந்தால்
காளையவன் தான் உடையானா?
காலம் நமக்கு வந்துவிட்டால்
கனவும் நனவா மாறாதா?

கோவில்

சுஜாதா
 
மக்களின் காணிக்கை
மாக்களின் வேடிக்கை
அரசனின் கோரிக்கை
ஆண்டியின் வாடிக்கை 

பெண்

சுஜாதா
 
பார்வைக்கு அழகானவள்
பண்பிற்குப் புதிரானவள்
பாசத்திற்குத் தாயானவள்
பணிவிற்கு நிகரானவள்

பாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம்


பாய்ந்து தாக்கும் சிறுத்தையின் குணம் கொண்டவனே தமிழா சாய்ந்து மண்ணில் கிடக்க நாம் என்னடா உக்கிய மரமா தேய்ந்து மூலையில் கிடக்க நாம் என்ன பழைய செருப்பா மாய்த்து வா பகையை ! எழுந்து பறை சாற்றி வா வெற்றியை.

நாமிருக்க நாடு இல்லை

Inthiran
 
ஆதவனால் வான் மதியும்
ஒளி மழையைப் பொழியுமே
சாதனையால் தமிழ்மொழியும்
கவிமழையில் நனையுமே
 
நாமிருக்க நாடு இல்லை
அதை எழுதிக் கிழிக்கவா
ஆம் அதற்குக் காரணம் யார்
எம்மவர் தான் பழிக்கவா ..!

மாவீரன் மடிவதில்லை


நாம் உறங்க தாம் விழித்து 
நமைக்காத்து உயிர்நீத்து
தாமுறங்கும் கல்லறையும் 
தகர்த்து எறியப்பட

தமிழர் நம் மனங்களில் குடிவாழும் 
தமிழ்த்தாய் பெற்றெடுத்த 
தன்னிகரில்லா தன்மான சின்னங்கள்

 உற்றவரும் உடன்பிறப்பும்  கண்மூடி தூங்குகையில்
சற்றும் தடையின்றி 
சுற்றிவரும் உங்கள் நினைவலைகள்

பற்றி எரியும் 
பெற்ற மனத்துயர்
மற்றவர்கள் யார் அறிவார்?

குற்றமிங்கு தமிழராக பிறந்ததென்று
குலை நடுங்கி குற்றுயிராய் செத்தொழியும் 
நிலை மாறி  
நீவீர் சிந்திய குருதியும்
விலையற்ற  தியாகமும் ஒருநாள் ஆளும்

கார்த்திகைப் பூக்கள்


சிந்திய இரத்தம்
செந்தூரம் பொங்கப்
பச்சைத் துரோகம்
பக்கத்திலிருக்க
வந்த கதிரொளி
வாராமல் போக மெல்ல
நொந்த கதை சொல்லும்
கார்த்திகைப் பூக்கள்

மரணமிப் பிரிவு.......!

ஹாசிம்
 
மழலை உன் சொற்களில்
மயங்குகின்றேன் கண்ணே... என்
மனதிற்குச் சுமையாய்
கனக்கிறது உன்வார்்தைகள்
 
விளையாட்டுக் காட்டிவிட்டு
விட்டுவிட்டுச்சென்றாய் என்று
அங்கலாய்பில் அழுகிறாய் நினைத்து
என்னுயிர் பிரிந்தது போல்
நானும் அழுகிறேனிங்கு
 
என் தடங்களைத் தடவிப்பார்த்து
தந்தை முகம் தேடுகிறாயென்று உன்
தாய் மொழியில் கேட்டு நான் தவிக்கின்றேன்
இத்தரணியில் நாம் பெற்றவரம் இதுதானோ.....
 
கடந்த பெருநாட்களைக் கடிந்து
என் வரவில் பெருநாள்க் காணக்
காத்திருக்கும் செல்லமே...
என் நிலைகொண்டு நொந்தழுகிறேன்
 
மரணம் எமை பிரித்திருந்தால்
மறந்திடுவாய் ஒரிரு நாட்களுக்குள்
தினம் தினம் மரணமிப் பிரிவால்
மகிழ்வின்றித் தவிக்கிறாய்....
 
எமைப்படைத்த இறைவனிடம் மாத்திரம்
இருகரமேந்தி நில் எம் போன்ற துயர்
இனியாருக்கும் கொடுத்திடாதே என்று
வல்லநாயன் வழிசெய்யட்டுமெம் வாழ்வுக்கு.....
 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com