-
mas template
Latest Poems

முழுவதும் அவள்


என் கவிதைப் படைப்புகளின் அரசியே 

உன்னை என் கவிதைகளால் அலங்கரிக்கவா... 


உன்னிலிருந்து வடிந்த கவிதை வரிகளை 

உன் மீது அள்ளி வீசவா... 


காற்றில் தவழும் உந்தன் கூந்தலை 

என் மீது அள்ளி போத்தவா... 


வாசம் வீசும் உன்னையே 

உன் பின்னால் தொடர்ந்து வரவா.. 


பூமியை தொடும் உன் பாதங்களை 

செருப்பென என் கைகளில் தாங்கிக்கொள்ளவா... 


நீயே என் முழுவதும் என வாழ்கிறேன் என் கவிதையே 

என்னையே முழுவதுமாய் உன்னிடம் பரிசளிக்கவா............. 

அவளே அனைத்தும்

 

காலை விழிப்பின் பொழுதிலே 

உன்னை அருகில் காண்பதேன் 

கோடி முத்தங்கள் தருவதற்கா... 


மாலைக் களைப்பின் கடைசியிலே 

உந்தன் மடியினில் இடம் தருவதேன் 

விரல்கள் கொண்டு தலை கோதவா... 


இரவுத்தூக்கம் இன்புறுவதற்கே 

இடையினில் இடம் தருவதேன் 

இரவும் கொஞ்சம் நீளவா.... 


மீண்டும் விடியும் பொழுதிலே 

மீண்டு எழ மறுப்பதேன் 

இன்னும் நெருக்கம் கூடவா.........

அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும்

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும் முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும் தாயிடம் --உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .! காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே --உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா . பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும் பிள்ளை வயிறு பசி பொறுக்காது என்பவளே --உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .! வேதனை எனக்கென்றால் விம்மி நான் அழுதால் விடியும் வரை விழித்திருந்து விழியில் உதிரம் வடிப்பாயே --உன் விழிகள் வலிக்காதா அம்மா .! தவறுகள் நான் செய்ய தண்டனை நீ பெற்று குற்றம் உன்மேல் எனும் சுத்தமானவளே --உனக்கு கோபிக்க தெரியாதா அம்மா .! காற்றுப்பட்டு நான் வீழ்ந்தாலும் கண்பட்டு வீழ்ந்தேன் என்று ஊருக்கே திட்டிவிட்டு கண் திருஷ்டி கழிப்பவளே -- உனக்கு கண்ணானேனா நான் அம்மா .! தோளுக்கு மேல் வளர்ந்த பின்பும் தலை துடைத்து எண்ணெய் தேய்க்க --இன்னும் சலிக்கவில்லையா அம்மா .! விக்கினாலும் தும்மினாலும் நினைப்பது என் பிள்ளை என்று நெகிழ்கின்றாயே அம்மா நினைத்துக்கொள்கின்றேன் இன்னுமோர் பிறப்பில் உனக்கு நான் அன்னையாக ...!! 


 கயல்விழி

அம்மா யென அழைக்க

பெரியம்மா....
சித்தியம்மா....
அத்தை.... யென
அழைக்க
இங்கே குழந்தைகள்
உண்டு!
"அம்மா"வென
அழைக்க
எப்பொழுது
வருவானோ?
என் பிள்ளை!

விலை மாது

பூவும் நானும்
ஒரு ஜாதி
யாரோ பறிப்பார்கள்...
யாரோ விற்பார்கள் ...
வாசம் வீசும் வரை
அவர்கள் வசம் நான்.
பூக்களை கொண்டாடும் மக்கள்
என்னை மட்டும் ஏன் கொண்டாடுவதில்லை
எவரை திட்டுவதாய் இருந்தாலும்
என் பெயர் வைத்தே ...திட்டுகிறார்கள் .
மௌனமாய் செல்வதை தவிர ...
வழியேதும் இல்லை எனக்கு
ஏன் என்றால்
பூக்களும் நானும்
மௌனம் மட்டுமே
பேசுகிறோம் .

துடிக்கும் இதயம்

என்னிதயம் வாழ்வதற்காய் துடிக்கவில்லை
நீ வாழவைப்பாய் என்று உனக்காகத் -
துடிக்கிறது......

மூச்சுக்ககாற்று இல்லையென்றாலுமம் நின்றுவிடும் இதயம் கூட,
இன்று ஓயாது துடித்துக்கொண்டிருக்கிறது அருகே நீ இருப்பதால்......

-அ.ஜதுஷினி.

ஏழையின் ஆசை

ஏழையின் ஆசை
மாட மாளிகை வேண்டாம்
மழையில் ஓழுகாத வீட்டில் வாழ ஆசை
பல்வேறு வகையான உணவுகள் வேண்டாம்
மூன்று வேளையும் வயிறாற சாப்பிட ஆசை
அழகான ஆடைகள் வேண்டாம்
கிளிசல்கள் இல்லாத ஆடை அணிய ஆசை
பட்ட படிப்புகள் வேண்டாம்
ஆரம்ப கல்வியாவது கற்க ஆசை
மகிழ்ச்சியான வாழ்க்கை வேண்டாம்
கண்ணீர் இல்லாத வாழ்க்கை வாழ ஆசை
ஆண்டுகள் பல வாழ வேண்டாம்
வாழும் வரை பிறரிடம் கையேந்தாமல் வாழ ஆசை
ஒவ்வொரு நிமிடமும் துன்பத்தினால் துவளும்
இந்த ஏழையின் ஆசை என்றுதான் நிறைவேறுமோ
இறைவா அடுத்தொரு உலகிலாவது ஏழைகளை உருவாக்கும்
உயிர்களை படைக்காமல் இரு - இல்லையெனில்
உலகமும் வேண்டாம் நீயும் வேண்டாம்
உயிர் உள்ளவரை உணர்ச்சியெல்லாமல் வாழ்ந்துவிட்டு போகிறோம் !!!

சாதி மறு! சண்டையொழி!


சதையறுக்கும் பச்சைவாசம்
ஐயோ சாதிதோறும் வீசவீச,
தெருவெல்லாம் சிவப்புநாற்றம்
முட்டாள்கள் மேல்கீழாய் பேசப்பேச!

மாக்க ளூடே சாதி வேறு
மண்ணறுக்கும் சாதி வேறு
மனிதங்கொல்லும் சாதியெனில் – அதைச்
சாக்கடையில் விட்டெறிடா!

பெற்றவயிற்றில் மூண்ட நெருப்பு
வெற்று சாதிக்காய் மூண்டதுவே,
பத்துமாதம் சுமந்த நெஞ்சில் – தீண்டாமை
தகதிமிதோம் ஆடுதுவே;

ஐயகோ பூமிப் பந்தை
அற்பசாதி அறுத்திடுமோ
ஓட்டைத்தட்டில் வறுமையென்றால்
உயிர்க்கொண்டு அடைத்திடுமோ..?

வீட்டுக்குவீடு சாதிப்பேச்சு
ஊரெல்லாம் ரெண்டாப் போச்சே,
அடேய்; மனிதத்தை விற்காதே, நில்
இனி மிருகங்களே காரி உமிழும்!

மிச்சத்தை மீட்கவேனும்
மனிதர்களாய் ஒன்று கூடு,
அங்கே ஆடையற்று கூட நில்
சாதியோடு நின்று விடாதே;

சாதியை விடு..
சாதி போகட்டும் விடு..
ஓ மனிதர்களே வா’
என் மனிதர்களே வா “நான் சாதியற்றவன்”
சொல் “நான் சாதியற்றவன்”

சாதியற்ற இடத்தில்தான் நாளை
மனிதர்கள் மனிதர்களாகப் பிறக்கக் கூடும்,

மழை நிலா காற்று போல நாமும்
மனிதர்களாக பிறப்போம்; மனிதர்களாக மட்டுமே மடிவோம்!

- வித்யாசாகர்

சிறு வயதுகாலம்...

‎புத்தாடையும்‬, புது சப்பாத்தும்
அடம் பிடித்து
வாங்கி விட்டேன்
ஆசையாய் அணிந்து செல்ல
விடியாமல் அடம்
பிடிக்கின்றது இரவு

வாழ்க்கை....!

சுஜாதா
 
கனவுகள் ஆயிரம்
கண்டதுண்டு
கற்பனை செய்தும்
வாழ்ந்ததுண்டு
கல்வியைச் சிறிது
கற்றதுண்டு
கருவினைச் சுமந்து
பெற்றதுண்டு
கணக்கினைப் பெரிதும்
வெறுத்ததுண்டு
கருணையைக் கண்டு
களித்ததுண்டு
கடவுளை என்றும்
துதித்ததுண்டு
கடற்கரை எழிலை
இரசித்ததுண்டு
கட்டிய கணவனை
மதித்ததுண்டு
 
Copyright © 2011. Tamil Poems - All Rights Reserved
Published by Eelanila.com