{[['
']]}

கிராமத்து வீடுகளில் திண்ணையில்லா
வீடு தேடினாலும் கிடைக்காது
பெரிய திண்ணை, சின்ன
திண்ணை ஒட்டுத் திண்ணை.
பெரிய மருது, சின்ன மருதுவாய்
மகுடம் தரிக்காத மகாராஜாக்கள்
ஆண்டு சரித்திரம் படைத்தவை;
ஒன்றா இரண்டா? எடுத்துச் சொல்ல மாளாது;
வெற்றிலைப் பெட்டியும், வெங்கலக்கூஜாவுமாக
திண்ணையில் உட்கார்ந்து
வயல்வரப்பு, மடவாய்ச்சண்டை,
அண்ணன் தம்பி குடும்பச் சண்டை
பாகப்பிரிவினை, பண்ணை ஆட்களுக்கு
பஞ்சாயத்து, கோர்ட்டுக்குப் போகாம
காசு வாங்காத நியாயமான கட்டப்
பஞ்சாயத்து நடக்கும்;
பிள்ளைகள் நிறைந்து ஒரு திண்ணை,
பள்ளிக்கூடமாய் ஆகிவிடும்;
சினா மாமாவீட்டுத் திண்ணையிலே
தினம் தினம் நடக்கும் சிட்டுக்கச்சேரி
சாயங்காலம் வரைக்கும் ஓயாது.
குருக்கள் வீட்டுத் "திண்ணையிலே விபூதி மந்திரிக்க,
தாயத்து, குறிகேட்க வரும் கூட்டம்,
தெருக்குழந்தைகளுடன்,
கட்டம், சோழி பல்லாங்குழி, கல்லாங்காய்,
புளியங்கொட்டை ஆட்டம்
ஆடும் சங்கரி அத்தை திண்ணை,
நாட்டுச்சேதி, வீட்டுச்சேதி
அரசியல் சேதி, அக்குவேறு ஆனி
வேறாக அலச
தெருவே கூடும், நியூஸ்பேப்பர்
மாமா வீட்டுத் திண்ணை.
வீட்டுப் பசங்க ராத்திரி,
திண்ணையிலே படுக்கிறேன்.
காத்துவரலே" "உள்ளே எனச்
சொல்லி, தலையணைமேலே வைத்துவிட்டு
இரண்டாம் பிளே சினிமாவுக்குப்
போக உதவிய திண்ணை.
காற்றாட உட்கார்ந்து களிப்பும்
சிரிப்புமா இயற்கைக்காற்றை
அணு அணுவா ரசித்து,
மகிழ்ந்திருந்த திண்ணை.
அத்தனையும் விட்டுவிட்டு
நாம் பட்டணத்துப்
பகட்டுக்கு ஆசைப்பட்டு ஓடிவந்து,
அலங்காரமாய் நிற்கும்
அடுக்குமாடிக் கட்டடங்களில்
மூடிப்போட்ட ஜாடியாய்
அடைபட்டு மூச்சு முட்ட சாத்திய
கதவுக்குள், காற்றை காசு
கொடுத்து ஃபேன், ஏஸி என வாங்கி
கரண்ட் போய், வியர்வை வெள்ளத்தில்
மூழ்கி, சோபாவில்
உட்கார்ந்தால், ஐயகோ! கூர்முள்ளாய்க்
குத்துது, குஷன் வைத்தசோபா!
கிராமத்துத் திண்ணை நினைவுகளில்
அலைபாயும் நெஞ்சில் ஏக்கம்வடியுது;
இனித் திண்ணையோடு வீடு கிடைக்குமா?
கிடைக்குமா?
No comments:
Post a Comment